Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

தாய்மொழி

தாய்மொழி

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்ற ஒன்று உண்டு அதை அனைவரும் மதிப்பதும் உண்டு. நம் தாயை நேசிப்பது போலவே மொழியையும் நேசிப்போம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே நேரத்தில் எத்தனையோ வித்தியாசமான  நாடுகள், வித்தியாசமான நகரங்கள், வித்தியாசமான பூகோள அமைப்பு உடைய இடங்களில் வசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இருக்கும் அந்த கலாச்சாரத்தின் முதுகெலும்பே மொழி தான். சில மொழிகளுக்கு எழுத்து வடிவமே இன்றளவும் இல்லை ஆனால் அந்த மக்கள் தங்கள் மொழியை காப்பாற்றி தொன்றுதொட்டு வளர்த்து வருகின்றனர்.

நம் மொழிதான் சிறந்தது மற்ற மொழிகள் சிறந்ததன்று என நான் ஒரு போதும் கூறியதில்லை. அனைத்து மொழிகளுமே அவரவர்க்கு சிறப்பு. ஏனென்றால் அந்த மொழியில் தான் அவர்களது முதல் சொற்களை பேச  பழகியிருப்பார்கள். ஏன் அம்மா என்று தங்கள் மொழியில் முதலில் கூறுவதினாலே அம்மொழியை தாய் மொழி என்கிறோம். இப்படியாக நம் அன்னைக்கு நிகரான ஒரு இடத்தை நம் மொழிக்கு இன்றளவும்  கொடுத்து வருகிறோம்.

ஒருவருக்கொருவர் தன் அன்பை பரிமாறிக் கொள்வது மொழியாலே. நெருங்கிய உறவுகளில் கூட தொலைவிலிருந்து அணைப்பது மொழியின் உதவியால் மட்டுமே அப்படியாக எந்த மொழியாயினும் தாய் மொழியில் என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். 

இருக்கிறது சிறப்பு, நாம் எந்த தேசம் வேண்டுமானாலும் செல்லலாம். எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் புலமை பெறலாம். ஆனால் நாம் பேசப்படும், கேட்கப்படும், கற்கப்படும் அத்தனை மொழிகளில் வரும் வார்த்தைகளின் அர்த்தமும் நமது தாய்மொழியின் வழியாகத் தான் மனதில் பதிவேற்றப்படும். அதுமட்டுமல்லாமல் அத்தனை வார்த்தைகளினால் ஏற்படும் உணர்ச்சிகளும் (சிரிப்பு, கோபம்) நம் தாய் மொழியால் மொழிபெயர்க்கப் பட்டு நம்மால் உணரப்படுகிறது. இவை அனைத்தும் நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் ஒரு நிகழ்வு இவை அனைத்தும் நொடி பொழுதில் நிகழும். அது நினைவில் வைக்கப்படுவதும் தாய்மொழியில் மட்டுமே அது எந்த மொழியாயினும்.

இன்று பெரிய நிகழ்ச்சிகளில், மேடைகளில் பேசுபவர்கள் தம் தாய்மொழியில் பேசுவது பெருமையான ஒன்று என கருதும் தலைமுறையினர் வளர்ந்து வருகின்றனர்.


எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் புலமை பெறுங்கள். ஆனால் உங்கள் முதல் மொழியான (தமிழ் மொழி) தாய்மொழிக்கு பெருமை சேருங்கள்.

மகாகவி பாரதி தமிழ் தவிர வேறு சில மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் இருப்பினும் “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்” என்று பாடினார். மற்ற மொழிகள் கற்ற பின்னரே அவர் இப்படி கூறினார். என் தாய் மொழிக்கு அவ்வப்போது என் எழுத்துக்களால் பிறரது பார்வைபடும்படி இது போன்ற கட்டுரையின் மூலம் மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் மேலும் ஒளியேற்ற வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் மொழி மட்டுமல்ல இதை படிப்போரது தாய் மொழி எதுவாயினும் அந்த மொழியை வளர்ப்பதும், வாழ வைப்பதும், பெருமை படுத்துவதும் உங்கள் கடமை.

திரைக்கடல் தாண்டி வந்த போதிலும்
திகட்டாத என் தமிழ் மொழிக்கு வேறு உவமை தேடி களைக்கிறேன்.
தமிழ் என்ற சொல்லிற்கு தமிழே இணை.
நன்றி
-பிரதாப் மோகன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]