Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

மனிதம்

மனிதம்
இவ்வுலகில் மாற்றங்கள் பல நடந்தேறும் நிலையில் நம் தோற்றமும் மாறும் இவ்வேளையில் நம்  மனதின் எல்லை குறுகி கொண்டே வருவதை நாம் கவனிக்க தவறுகிறோம்.
 அன்று ஒரு அனா, இரண்டு அனா, நாலனா, எட்டனா, 5 காசு 10 காசு என தொடங்கி இன்று 2000 ரூபாய் வரை பணத்தின் மதிப்பு கூடி மனிதத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. 
பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய ஆள் உள்ளனர் என்ற ஆணவ குணம் நம்மில் பலரிடம் மேலோங்கிவிட்டது. இதற்கு காரணம் ஒன்று மட்டும் தான் “பசி”. 
இந்த பசி தனிமனிதன் மட்டுமல்லாமல் குடும்பத்தின் பசியை போக்க பணம் தேவை. அத்தேவைக்காக கிடைக்கும் வேலையை தன்மானம் கருதாமல் பலர் நமக்காக உழைத்துக் கொடுக்கின்றனர்.
அப்படி நம்முடைய நலனை பெரிதும் பாதுகாக்கும் ஒருவர் பற்றியே இக்கட்டுரை. சிறிய ரிக்ஷா முதல் பெரிய விமானம் வரை இயக்கும் ஓட்டுனர் மாலுமி, விமானி என பல பெயர்களில் அழைக்கும் அவர்கள்தான் இன்றைய கதாநாயகன் இன்று மட்டுமல்ல என்றுமே.
பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல முன்டியடித்து இடம்பிடித்து பேருந்தில் அமர்ந்தபின் அரைமணி நேரம் தாமதமானால் போதும் அவர்களை வசைபாடும் பலர் நம்மில் உண்டு. தன் குடும்பத்தோடு கொண்டாட வேண்டிய பண்டிகையை கொண்டாட முடியாமல் நமக்காக உழைக்கும் உயிர்கள் இவர்கள். நம்மில் சிலர் இவர்களை பற்றி உணர்வதே இல்லை. அவர்களும் மனிதர்கள் தான். பணம் கொடுத்துவிட்டால் அவர்கள் நம் அடிமைகள் இல்லை. அவர்களுக்கும் சரியான நேர்த்தில் உணவு, தேவையான உறக்கம் வேண்டும். ஆனால் அதை முழுமையாக அனுபவிக்காமல் நாள் முழுவதும் உழைப்பவர்கள்.
பற்பல அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள்கூட காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். ஆனால் இவர்களோ முதல் நாள் சென்று மறுநாள் வீடுதிரும்புவர்.  இப்படியாக சமீபத்தில் என் பயனத்தின் போது சென்னையில் இருந்து நாகை சென்று கொண்டிருந்தோம். நள்ளிரவு இரண்டு மணி புதுச்சேரியை கடந்த சில நொடிகளில் நான் சென்ற பேருந்தின் குறுக்கே ஒரு கார் கடக்க முயன்றது ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. பேருந்து ஓட்டுனரின் புத்திசாலிதனத்தால் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் பிழைத்தோம். 
ஆனால் கார் ஓட்டுனரும் காவல் அதிகாரியும் ஓட்டுனர் மீது தவறு என்பது போல் பேசினர். நாங்கள் அனைவரும் பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாக நின்றோம். வழக்கு பதிவு என்பதால் அப்பேருந்தில் செல்ல இயலாது.
ஞாயிறு இரவு என்பதால் பயணிகளை மாற்றி வேறு பேருந்திலும் அமர்த்த முடியாததால் அனைவரையும் புதுச்சேரி பேருந்து நிலையம் வரை அழைத்து சென்று மீதமுள்ள பயணத் தொகையை திருப்பி தந்தார் நடத்துனர். பயணம் பாதியிலே நின்று போனதால் வழக்கம் போல் பயணிகள் மனதிற்க்குள்ளயே முனுமுனுத்தனர். என் தந்தையும் நடந்துனர் என்பதால் அவர்கள் இருவரின் மனநிலையை என்னால் சிறிது புரிந்துகொள்ள முடிந்தது. எனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் (பெரிய சார்) என்று அழைப்போம். அவர் ஒருமுறை கூறினார் நான் பயணிக்கும் போது பயணம் முடிந்த பின் ஓட்டுனர் நடத்துனர் இருவருக்கும் நன்றி கூறுவேன் என்றார். அதை அப்போது பின்பற்றவில்லை சமீப காலமாக பின்பற்றுகிறேன்.
அனைவரும் பேருந்தை விட்டு இறங்கிய பின். நான் ஓட்டுனரிடம் சென்று “ கை குலுக்கி முதலில் எங்கள் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி அண்ணா. எல்லாம் சரியாகிவிடும் தைரியமாக இருங்கள்” என்றேன். அதுவரை கவலையில் வாடியிருந்த முகம் மகிழ்ச்சியில் சிரிப்போடு நிறைந்தது.
அந்த நேரத்தில் அவரின் ஒரு மாத சம்பளத்தை கொடுத்திருந்தாலும் அவர் மனம் ஆறுதல் அடைந்திருக்காது. 
இந்த உலகம் ஏங்கிக்கிடப்பது வெற்றியின் போது சிறு பாராட்டும் தோல்வியின் போது சிறு ஆறுதலும் தான். மனதாற பாரட்டும் பொழுது அந்த வெற்றியை நீயும் சுவைப்பாய். தோல்வியிலோ கஷ்டத்திலோ ஆறுதல் தரும்போது அவர்களின் துன்பத்தை குறைப்பாய்.
பணம் மட்டும் தேவை என நினைத்தால் பணம் உனக்கு நிச்சயம் கிடைக்கும் ஆனால் மகிழ்ச்சி கிடைக்காது.
மகிழ்ச்சி தேவை என நினைத்து பார் உன் மகிழ்ச்சியின் ஒரு பகுதியான பணம் உனக்கு கிடைக்கும்.
பணம் என்பது தேவைக்கு மட்டுமே உன் மனதிற்கு தேவை மகிழ்ச்சியே.
மனதில் மனிதநேயத்தை வளர்ப்பீராக என நினைத்து முடிக்கிறேன் இக்கட்டுரையை. 
அனைத்து ஓட்டுனர் நடத்துனருக்கும் சமர்ப்பணம்
நன்றி


-பிரதாப் மோகன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]