பல நபர்கள் இது போன்ற பதிவுகளை புறக்கணிக்கும் இந்த அவசர உலகில் எனது பதிவை படிக்க நினைத்த உங்களுக்கு எனது முதல் நன்றி கலந்த வணக்கங்கள்.
இன்று மட்டுமல்ல நம் வாழ்வில் என்றுமே ஒரே முறைதான் முடிவு அது நாம் மரணிக்கும் நாள் மட்டும் தான். அதுவரை நிகழும் அனைத்து நிகழ்வும் கடந்து செல்பவைதான் அதிலும் சிலவகை நிகழ்வுகள்தான் நம் மனதின் நிம்மதியை கடத்தி செல்பவை.
அப்படிப்பட்ட கடின நேரம் அனைவருக்கும் அவரவர் வாழ்விற்கு ஏற்றபடி நிச்சயம் ஏற்பட்டிருக்கும் இனியும் ஏற்படலாம். அவைகள் தவிர்க்க முடியாதவை தடுக்க முடியாதவை ஆனால் அந்நிகழ்வுகளிலிருந்து நிச்சயம் விடுபட முடியும். அது நம் மனப்போக்கினை கட்டுபடுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதின் மூலமே.
இன்றைய கால நிலையில் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நமக்கென ஓர் இடத்தை அடையாளத்தை நிறுவி அதில் புகழும் செல்வமும் நிறைந்த வாழ்க்கையை வாழவே இத்தனை காலம் உழைத்து வருகிறோம் இனியும் உழைக்கவும் தயாராக உள்ளோம்.
ஆனால் அந்த இடத்திற்கு செல்லும் பாதைகளில் பல வேறுபாடுகள் உண்டு அது அவரவர்களின் தேடல்களை பொறுத்து மாறுபடும். ஆனால் அந்த பாதைகளில் சந்திக்கும் தடைகள் ஏறத்தாள ஒன்றே.
நமக்கு முன்னே செல்பவர்களும் நம்மை போன்று நம்மோடு செல்ல துடிப்பவர்களும் நமக்கு சிறு சிறு தொல்லைகள் தருவதுண்டு. அந்த தொல்லைகளின் அளவு மீறும்போது நம்மால் அதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
“ஒரு அலுவலக மேலாளர் தனது கீழே வேலை செய்யும் தொழிலாளிக்கு அதிக அளவில் மன உளச்சல் தரும்பொழுது அந்த தொழிலாளி தன் மனதால் உடலால் அந்த வேலையையும் தனது வாழ்வையும் நினைத்து வேதனை அடைகிறார்”. அது போல ஒவ்வொருவருக்கும் தங்களது தொழிலிலோ அல்லது வாழ்விலோ துன்பங்களும் துயரங்களும் தொடர்ந்து வருகிறது.
அனைவருக்கும் எற்படும் ஒரே கேள்வி “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?” என்ற கேள்வி தான்.
இந்த கேள்வி ஏற்படாத ஆளே இல்லை, அப்படி ஏற்படவில்லையெனில் உங்களுக்கான பதிவு இது இல்லை. நீங்கள் மகிழ்ச்சியினை உருவாக்கிக் கொள்ளும் திறன் உடையவர் என்று கூறுவேன்.
இக்கேள்வி ஏற்படும் என் நண்பர்களுக்கு மட்டும் இந்த பதிவு. எந்த ஒரு மனிதரும் தன்னுள்ளே தனித்துவம் கொண்டு பிறந்தவரே. ஆனால் அதை அவர் எப்பொழுது அறிகிறார் என்பது பொறுத்தே அவர் வாழ்வின் வளர்ச்சி அமையும். எந்த ஒரு துறையிலும் சாதிப்பவர் எளிமையாய் அந்த இடத்தை அடைந்துவிடுவதில்லை. நாம் அனைவரும் அவர் உயர்ந்த இடத்தை அடைந்த பின்னே அவரை பார்க்கிறோம். அதிலும் அவர் அந்த நிலையில் பெறும் செல்வத்தையும் புகழையும் மட்டுமே நினைத்து நம் வாழ்வை ஒப்புமை படுத்தி மனச்சோர்வு அடைகிறோம். அவர் கடந்து வந்த பாதையையும் அவர் சுமந்து வந்த சுமையையும் யாரும் பார்ப்பதில்லை.
ஒரு துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த எடுத்துக் கொண்ட காலத்தையும் புதிய பாதையை உருவாக்க அவர் செய்த கடின வேலைகளையும் பார்த்தால் அந்த உயர்வின் கடின வலியை நம்மால் அறிய முடியும். அறிவுரை கூறும் அளவிற்க்கு என்னிடம் அனுபவம் இல்லை ஆனால் சிறு யோசனையை உங்களிடம் பகிர ஆசை உள்ளது.
இன்றைய இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்வில் நினைத்த நிலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர். உங்கள் நிலை நிரந்தரமில்லை முயற்சிகள் நிச்சயம் பலன் தரும். வேலைப்பளு காரணமாக பல நண்பர்கள் தங்கள் தொழிலையும் தம் வாழ்க்கை நிலையையும் வெறுக்கும் இந்நேரத்தில் நான் உங்களுக்கு சொல்வது ஒன்றே. மன்னிக்க பழகுங்கள் மனதாற மன்னித்து விடுங்கள் எந்நிலையிலும் மனதில் வெறுப்புணர்வுகளை நிரப்பாதீர்கள். மகிழ்ச்சி தரும் மற்ற நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல விரும்பும் நீங்கள் இந்நிலையில் உள்ளவரிடமே முறைத்துக் கொண்டே இருந்தால் அடுத்த நிலைக்கெ செல்ல முடியாது.
கலாம் ஐயா சொன்னது போல செய்யும் வேலையை மட்டும் நேசியுங்கள், அந்த நிறுவனத்தையோ நிறுவனரையோ நேசிக்க அவசியமில்லை. செய்யும் வேலையிலும் உங்கள் லட்ச்சியத்திலும் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
எல்லோரது வாழ்விலும் “வேறு வழியே இல்லை என்று நினைக்கும் சமயத்தில் தான்” பல நபர்களுக்கு புது வாழ்வே கிடைத்துள்ளது. ஆகையால் எந்த நிலையிலும் இது தான் முடிவென்று முடங்கிவிடாதீர்கள். அறிஞர்கள் கூறுவது போல் பறந்தோ நடந்தோ தவழ்ந்தோ முன்னேறுங்கள்.
நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் நம்முடையது, வாழ்வில் உயர் நிலை அடைய காலம் தேவை ஆகையால் உங்களது வெறுமையான நாட்கள் “ முயற்சி செய்து கொண்டிருந்த நாள் என்றோ… (அ) வீணடித்த நாட்கள் என்றோ…” மற்றவர்களை கூற வைப்பது உங்களது பொறுமையினாலும் உழைப்பினாலும் மட்டுமே சாத்தியம். ஆனால் நீங்கள் சந்திக்கும் அனைத்து நாட்களுமே அனுபவ நாட்களே.
எது நடந்தாலும் “இது முடிவல்ல” இன்னும் வாய்ப்புகள் உண்டு என எண்ணி உங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு ஒரு உந்து சக்தியை உருவாக்கிக் கொள்ளுங்கள் முடிந்தவரை மற்றவரின் சோகத்தை பகிர அவர்களுக்கான ஒலிவாங்கியாக செவிகொடுங்கள். பல நபர்களின் மன அழுத்தம் இதன் மூலம் குறையும். நன்மை தீமைகளும் வெற்றி தோல்விகளும் நம் பயணத்தில் சந்திக்கும் சன்னலோர காட்சிகளே. ரசிக்க பழகுங்கள். உங்கள் வாழ்வில் வளம் பெற்று மற்றவரும் வளம் பெறும்படி வாழ வேண்டி விரும்பி இக்கட்டுரையை முடிக்கிறேன் நன்றி.
-பிரதாப் மோகன்
No comments:
Post a Comment