Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

விதை

விதை

இந்த தலைப்பை நீங்கள் பார்த்தவுடன் இது முற்றிலும் விவசாய பதிவு என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் இது விவசாயத்தை மட்டும் குறிக்கும் பதிவன்று அதற்குள் அடங்கியிருக்கும் வாழ்வின் தத்துவத்தை நான் உணர்ந்த வழிகளை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

நாம் வாழும் இந்த வாழ்வும் விவசாயமும் நெருங்கிய பந்தம் போன்றது. ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. விவசாயத்தில் மிக மிக முக்கியமான ஆயுதம் அது நேரம். இந்த ஆயுதத்தை முறையாக பயன்படுத்தினாலே வெற்றி நிச்சயம். அதாவது 120 நாள் வயதுடைய நெற்பயிரை அறுவடை செய்ய வேண்டுமெனில் இன்றிலிருந்து 120ம் நாள் வானிலை அறுவடைக்கு உகந்ததா என முன்னோக்கி யோசித்து பார்த்தே விவசாய வேலையை துவங்க வேண்டும்.

அதே போலே நம் வாழ்விலும் எந்தவொரு செயலை துவங்குவதற்கு முன்பாக அதன் பலன் எந்த அளவு லாபத்தை தரும் எத்தனை நாட்கள் அதற்கு செலவிடும் அதுமட்டுமன்று அதன் மூலம் நன்மை விளையுமா என்று முன்னோக்கி யோசித்து செயலை தொடங்க வேண்டும்.

விவசாயத்தை பொறுத்தவரை விதைக்கும் நாள், ஒருநாள் பின்தங்கினாலும் அறுவடையிலும் நமக்கு கிடைக்கும் பலனிலும் பெரிதும் பாதிப்பு ஏற்படும். இயற்கை ஒத்துழையாமல் கூட போகலாம். ஆகவே காலம்கருதி செயல்களை சரியாக செய்தல் வேண்டும். விவசாயத்தின் வழியே நேரத்தின் தத்துவத்தை அறியலாம்.

விவசாயத்தில் நிலத்தை தயார் செய்வது போல நாம் புதிய தொழிலை துவங்குமுன் அதற்க்கு தேவையான முற்பாடு வேலைகளை முறைபடுத்த வேண்டும். இப்படியாக விவசாய வழிமுறைகள் ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கை தத்துவத்தை நமக்கு அளிக்கின்றது.

அதன் வழியாக நான் கற்ற மிகச்சிறந்த தத்துவம் யாதென்பது விதைக்கும் முறைதான்.


உழவின் மகத்துவம் துவங்குவது விதையிலுருந்துதான். அந்த விதைக்கும் முறையில் அடங்கியிருக்கும் தத்துவம். ஒரு பெரும் நிலத்தில் விதைக்கும் பொழுது மிகுந்த நேரம் பிடிக்கும். அப்படி விதைக்கும் பொழுது தலை குனிந்து தான் விதைக்க வேண்டும் விதைத்த பின் அனைத்து குழிகளுக்கும் உயிர் நீர் விடவேண்டும். இது தான் நான் அறிந்த விதைக்கும் முறை.

ஒரு நீண்ட பெரும் வெற்றிக்காக ஒரு இலக்கிற்காக தயாராகும் நாம். அந்த இலக்கு எவ்வளவு பெரியது என்பதை நிர்ணயிக்க வேண்டும். அதாவது விளைநிலம் எவ்வளவு பெரியது என்பதை போல. பின் அந்த இலக்கை மனதில் வைத்து ஒவ்வொரு குழியாக தோண்டவேண்டும். அதாவது ஒவ்வொரு வழிகளில் முயற்சி செய்ய வேண்டும். பெரிய விளைநிலம் என நினைத்து வியந்து பயந்து  இத்தனை குழிகளுக்கும் எப்படி குனிந்து விதைப்பது என நினைத்து சோர்ந்து விட கூடாது. ஒவ்வொரு முறை முயற்சியின் போதும் அடுத்த படியை மட்டும் தான் பார்க்க வேண்டும். இலக்கு மனதில் மட்டுமே இருக்க வேண்டும். அந்த தூரம் காலத்தால் கடந்துவிடும். அது போல ஒரு குழியில் விதைத்தப்பின் அடுத்த குழியை மட்டுமே பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நிமிர்ந்து நிலத்தின் எல்லையை பார்த்தால் விதைக்கும் நேரம் நீண்டு கொண்டே போகும்.


உயிர்நீர் என்பது நம் முயற்சிகளுக்கு அவ்வப்போது எரிபொருள் ஊற்றுவது போலாகும். பயிர்களின் பாதுகாப்பில் செலுத்தும் கவனம் நம் இலக்கை அடைவதற்கு செலுத்தும் கவனம்.

எல்லாவற்றிர்க்கும் மேலாக விவசாயம் கற்று தரும் பாடம் பொறுமை. அது தான் தலையாய பாடம். விதைத்து விட்டால் மட்டும் போதாது, நீர் விட்டால் மட்டும் போதாது, உரமிட்டால் மட்டும் போதாது. அது பூக்க, காய்க்க, கனியாக காலத்தை தர வேண்டும். நம் வாழ்விலும் இலக்கு அடைவதற்கு காலத்தை தர தயாராக இருக்க வேண்டும்.

நம் வாழ்வும் இந்த பயிர் போன்றுதான். வறட்சி, புயல், வெள்ளம் போன்று இயற்கையினாலும், பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற செயற்கை நபர்களாலும் சிதைவிற்குள்ளாகிறோம்.

அதனிடமிருந்து மீண்டு எழும் சக்தியை தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்ளும் சுய அறிவு கொண்ட நாட்டு விதைகள் போன்ற மனிதர்கள் இலக்கை அடைகின்றனர்.

செயற்கை ஊக்க மருந்துகளால் சக்தி பெறும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்ற சொல்புத்தி கொண்ட சில செல்வாக்கு மனிதர்களும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

ஆனால் நாட்டு விதைகள் போன்ற மனிதர்கள் மட்டுமே தம்மை போன்ற பல தலைவர்களை உருவாக்குகின்றனர். மரபணு மாற்று விதை போன்றோர் தாம் மட்டுமே செல்வத்தை சேர்த்து அதன் பயன் மற்றவர்க்கு செல்லாமல் மலட்டு விதையாய் மாறி மடிந்து விடுகின்றனர்.

ஒரு நல்ல தலைவன் நூறு அடிமையை வைத்து ஆள்பவன் அன்று. ஆயிரம் தலைவனை உலகிற்கு உருவாக்குபவனே நல்ல தலைமை பண்பு கொண்ட தலைவன்.

நாம் உயர்ந்து நம்மை போன்றோரை உயர்த்தி நாட்டு விதையின் வழி வந்தோர் என எந்நாட்டவர்க்கும் உணர்த்துவோம்.

உலக தாய்மொழி தினமான இன்று இந்த தமிழ் விதையின் வழியே என் நன்றி.

-பிரதாப் மோகன்.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]