Inventor Pradhap

ஆதியும் அந்தமும் என் தமிழே🙏

Post Page Advertisement [Top]

பூ

பூ

இன்றைய நாட்களில் இந்த கட்டுரையை படிக்க துவங்கிய போதே நீங்கள் ஆர்வமுள்ள நபர் என்று என்னால் அறியமுடிகிறது. அப்படியே நீங்கள் பொறுமைசாலிதானா என்று நான் சோதிக்க உங்களது அறுபது நொடிகளை எனக்கு கடனாக தாருங்கள் அறுபத்தி ஒன்றாம் நொடியில் என்னால் முடிந்தவற்றை உங்களுக்கு திருப்பி தருகிறேன்.

ஏதோ ஒன்றை தொலைத்தது போலவே இன்றைய நாட்களில் நம்மில் சிலர் அங்கும் இங்கும் திரிகிறோம். எந்த செயல் செய்தாலும் திருப்தியில்லை. வாழ்வில் முன்னேற்றமில்லை, நிம்மதியில்லை, மகிழ்ச்சியில்லை, எதுவுமே இல்லை என்ற நிலையில் சிலர் அல்ல.. அல்ல... பலர் புலம்புவதை நம்மால் கேட்க முடிகின்றது. உங்கள் புலம்பலை நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை ஆனால் அதை திசை திருப்ப முயல்கிறேன்.

எந்த ஒரு பொருளானாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே அதன் மீது பிரியம் இருக்கும். பழக பழக பாலும் புளிக்கும் என்பது போலதான் வாழ்விலும். ஆனால் அந்த அளவு கூட நம்மில் யாரும் எதையும் ரசிக்க நேரம் ஒதுக்குவதில்லை. கிடைத்த ஒரு படிப்போ/வேலையோ அதில் இருக்கும் ஒரு சில கஷ்டத்தை மட்டுமே சுட்டிக்காட்டி அதன் மற்றொரு பாதியில் கிடைக்கும் அனுபவங்களை ரசிக்க ருசிக்க மறந்துவிடுகிறோம்.

நினைப்பது கிடைக்கும் ஆனால் நினைப்பது எல்லாமே கிடைக்கவேண்டுமென்றால் வாழ்வில் ஏது சுவாரசியம். மனதார ஏற்றுகொள்ளுதல் என்ற மாபெரும் தத்துவத்தை இன்றைய நாட்களில் வெகுசிலரே பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருமே மாறுபட்டவர்கள்தான். ஒவ்வொரு சூழ்நிலையும் மாறுபட்டது தான். இவற்றையெல்லாம் நாம் அப்படியே ஏற்று கொள்ளல் வேண்டும்.
வெற்றி என்ற ஒரு நிரந்தர நிலை எப்பொழுதும் இல்லை அதன் ஆயுட்காலம் ஒரு நொடி இன்பமோ அல்லது ஒரு நிமிடமோ தான். புகழ் நிறைந்த வாழ்க்கை தான் மகிழ்ச்சி என்றால். நிலைத்த புகழ் என்று ஓன்று இல்லை. புதிய புகழ் வராவிட்டால் பழைய புகழ் மங்கிவிடும்.
வெற்றி என்ற நிலைக்காகவும், புகழ் உச்சி என்ற மாயைக்காகவும் தன்னை ஏமாற்றி ஓடிக் கொண்டிருக்கும் நண்பர்களே சற்று நில்லுங்கள்.
உங்களை சுற்றியுள்ள மகிழ்ச்சி எனும் மலரை காணாமல், அதிலிருந்து கிடைக்கும் வாசம் எனும் பாராட்டுக்களை பெறாமல் எங்கு ஓடுகிறீர்கள்.

நம்மோடு வாழ்வோரை மகிழ்வித்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியும் அவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்களும்தான் வாழ்வில் அடிக்கடி தேவை. இப்படி ஒவ்வொருவரும் அந்த நேரத்தில் கிடைக்கும் அனுபவங்களை அப்படியே ஏற்றுகொண்டு வாழ்ந்தால் வாழ்வில் புலம்பல் ஏது!

அதுசரி நான் கடுமையாக உழைக்கிறேன் அதற்கேற்ற ஊதியமும் பாராட்டும் எனக்கு கிடைப்பதே இல்லை எதற்க்கும் பயன்படாமல், வளர்ச்சியில்லாமல் இருக்கிறேன் என்று வருந்தும் நண்பர்களுக்கு.
நன்றாக, பொறுமையாக, நிதானமாக அமர்ந்து யோசித்து பாருங்கள். உங்கள் அனுபவங்களையும் முந்தைய நாட்களையும். இந்த வேலை/படிப்பில் சேருவதற்க்கு முன்பு உங்கள் திறன் எவ்வளவு என்றும். இன்று எவ்வளவு உயர்ந்துள்ளது என்று. நேராக கண்ணாடி முன் சென்று உங்களை பாராட்டி கொள்ளுங்கள்.
சிலருக்கு சிரிப்பு கூட வரலாம் ஆனால் தற்பெருமையை மற்றவரிடம் கூறுவதை காட்டிலும் தன்னுடைய வளர்ச்சியை தானே ஆராய்ந்து தனக்கு தானே பாராட்டிக் கொள்வது எவ்வளவோ மேல். இப்படி செய்தால் அடுத்தவரையும் சில நேரங்களில் பாராட்ட தோன்றும், அப்படி தோனுகையில் மனதார பாராட்டுங்கள்.

நமது வாழ்வெனும் நிலம் முதலில் அனைவருக்கும் சமமாக வழங்கபடுவதில்லை. சிலருக்கு கருவேல மரம் நிறைந்த காடாகவும், சிலருக்கு பூஞ்சோலைகளாகவும் ஆரம்பம் இருக்கலாம். ஆனால் முடிவிலும் கருவேல காடாக இருக்கவேண்டாமே. நாளுக்கொரு கிளையாக, மாதமொரு வேராக பெயர்த்து. முடிந்தவரை முட்களை நீக்கி பூக்களை பூக்கவைப்போம் புன்னகை பூவால்.
நன்றி
-பிரதாப் மோகன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]