
நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் சிலரது அன்பினாலும் சிலர் தரும் அனுபவங்களாலும் கடந்து செல்கிறோம். அப்படியாக என் வாழ்வில் கிடைத்த சிலரது அன்பையும் அவர்களிடமிருந்து கிடைத்த அனுபவத்தையும் தங்களிடம் பகிர விரும்பிகிறேன்.
வழக்கமாக நமது மனதில் ஏற்பட்ட சில பதிவுகள் எத்துனை வருடங்கள் கடந்தாலும் நம் மனதை விட்டு நீங்குவதில்லை. அப்படியாக உங்களுக்கு எளிதில் நினைவுக்கு வரும் ஒரு நிகழ்வை நான் நியாபக படுத்த முயற்சி செய்கிறேன். நமது பள்ளி பருவத்தில் ஆசிரியர் நம் வகுப்பறைக்கு வரும்பொழுது நாம் ஒட்டுமொத்தமாக எழுந்து வணக்கம் ஐயா……. (Goooood moorninnggggg Sirrrrrrrrr/missss) என்று சொல்லி நம் ஒவ்வொரு வகுப்பும் துவங்குவோம். இன்றளவும் நாம் பள்ளிக்கு அருகே செல்கையில் நமது வகுப்பறையும் அங்கு நமக்கு கிடைத்த அனுபவங்கள் நொடிப்பொழுதில் கண் முன்னே வந்து போகும். அது போலே இன்றும் நம் பள்ளி ஆசிரியர்களை நாம் காணும் பொழுது நம்மை அறியாமல் நம் கை அவர்களை வணங்கும். குறிப்பிட்ட ஆசிரியர் நமக்கு பிடிக்காதவராக இருந்த போதும்.
அன்றோ நம் மனதில் பல நினைவுகளையும் ஒரு சேர ஒன்றினைத்து வைத்திருந்தோம். ஆனால் இன்றோ பலவற்றை மறந்து செல்கிறோம். சில நேரங்களில் பலரையும் மறந்து செல்கிறோம். அப்படி நான் மறந்து விடும் முன் தங்களிடம் கூற விழைகிறேன்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் கூறுகையில் “ தினமும் ஒரு முறை பழைய நண்பரிடமும் ஒரு புதிய நபரிடமும் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்” என்றார். அதன் முழு பொருள் அன்றைய தினம் புரியவில்லை.

இன்று அதன் பலன் கண்டு வியந்தேன். ஆம் உண்மையில் தினமும் ஒரு புதிய நபரோடு பேசுவது நம் வாழ்வில் ஓர் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இப்போது நீங்கள் ஓர் தாங்க முடியா துயரத்தில் சிக்கி தவிக்கின்ற பொழுது, தாங்கள் தங்களது நண்பரை சந்தித்தால். அவர் உங்களுக்கு ஆறுதல் கூறி தங்களை அந்த துயரத்திலிருந்து மீட்க முற்படுவார். இருப்பினும் உங்களிடமிருந்து ஒரு தெளிவான வார்த்தையை வரவழைக்க அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்.

அதே நேரம் நீங்கள் பேருந்திலோ அல்லது இரயில் பயணத்தின் போதோ நீங்கள் பல புதிய நபர்களை சந்திக்க நேரிடும் அப்படி ஒருவரை சந்திக்கும் பொழுது, அவர் எப்படி இருக்கீங்க? என்று கேட்ட உடன் தங்களை அறியாமலே “ நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கூறி அவர்களையும் நலம் விசாரிப்போம். இந்த நலமாக உள்ளேன் என்ற வார்த்தையை உங்களிடமிருந்து வரவழைக்க உங்களது தோழியோ தோழனோ மிகவும் சிரமபடுவர். ஆனால் புதிய நபரோ எளிமையாய் செய்துவிடுகிறார்.
இப்படியே நானும் ஒரு நாள் உடல்நிலை சரியில்லாத நாளில் மிகவும் சிரமப்பட்டு உணவருந்த சென்றேன். எப்போதும் உணவு பரிமாறுபவரிடம் சில வார்த்தைகள் பேசுவது வழக்கம். ஆனால் இது வரை எப்படி இருக்க தம்பி என்று கேட்டதில்லை. அன்று “எப்படி இருக்கீங்க தம்பி?” என்று கேட்டார். நான் என்னை அறியாமலே நல்லா இருக்கேன் அண்ணா என்றேன். நீங்க எப்படி இருக்கீங்க என கேட்டேன். எனது உடல் நிலை சரியில்லாத போதும் அந்த வார்த்தை எப்படி வந்தது என்று யோசித்தேன். அப்போது உணர்ந்தேன் நம் மனதில் பதிந்த சொற்கள் இவைகள் என்று.

இந்த வழக்கம் நாம் கடிதம் எழுதிய காலங்களில் மிக அருமையாக இருந்தது. கடிதம் எழுதுகையில் “நலம் நலமறிய ஆவல்” என்று எழுதுபவர் பலர். கடிதம் எழுதுபவரும் வாசிப்பவரும் ஒரே அன்பான நேர்கோட்டில் பயணித்த தருணம் அது. பின்பு தொலைபேசியில் தூரத்து சொந்தங்களிடம் பேசுகையில் சிறிது குறைந்து காணப்பட்டது. இன்று வெறும் எழுத்துக்கள் மட்டுமே உடனுக்குடன் பறிமாறி கொள்ளபடுகிறது, அன்பு அல்ல. இருப்பினும் இது வளர்ச்சியின் உச்சம். இந்த நேரத்திலும் நாம் நம் மனதை பழக்கிக்கொள்ள முயற்சிக்கலாம்.
நம் நாவிலிருந்து புறப்படும் வார்த்தைக்கு அப்படியொரு சக்தியுண்டு. நம் மன ஓட்டத்தின் வெளிப்பாடுகளே வார்த்தைகள். நல்ல சொற்களை பிறரை பாராட்டுவதற்கும், பிறர் துயரத்தின் உயரத்தை குறைப்பதற்க்கும் பயன்படுத்துவோம் மற்றபடி காரமான சொற்களை கொண்டு புண்படுத்த வேண்டாமே. நற்சொற்களையும், நற்சிந்தனைகளையும் வளர்க்க முற்படுவோம்.

இந்த அதிவேக உலகில் நம் அன்பிற்கினிய உறவுகளுக்கு மீண்டும் கடிதம் எழுதி அன்பை பரிமாறிக்கொள்வோம். முடிந்த வரை தொலைபேசியில் நம் நெருக்கமானவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். இவ்வளவு நேரம் எனக்கும் என் எழுத்துக்கும் நேரம் ஒதுக்கி என்னையும் உங்களது நெருங்கிய வட்டத்திற்குள் இணைத்துக் கொண்டதற்கு நன்றி.
அன்புடன்
-பிரதாப் மோகன்.
No comments:
Post a Comment